×

கோடை வெப்பத்தை தணிக்க நெல்லையப்பர் கோயில் நீச்சல்குளத்தில் காந்திமதி யானை குளித்து குதூகலம்

நெல்லை : கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க நெல்லையப்பர் கோயில் யானையான காந்திமதி, கோயில் வளாகத்தில் உள்ள நீச்சல்குளத்தில் நீச்சல் அடித்தும், குதூகலமாக குளித்தும் மகிழ்ந்தது. இதை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் பார்த்துச் சென்றனர். தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்திபெற்ற சிவாலயங்களில் நெல்லை மாநகரில் அருள்பாலிக்கும் சுவாமி நெல்லையப்பர்- அன்னை காந்திமதி அம்பாள் கோயில் பாரம்பரியமிக்க ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்ட வைபவம், ஆடிப்பூர திருவிழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம், கார்த்திகை சொக்கப்பனை தீபத்திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா, தைப்பூச திருவிழா, மாசி மகம் அப்பர் தெப்ப உற்சவம், பங்குனி உத்திர திருவிழா என ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. நெல்லையப்பர் கோயிலின் செல்லப்பிள்ளைாக 53 வயதுடைய காந்திமதி யானை உள்ளது.

சுவாமி, அம்பாள் அபிஷேகத்திற்கு தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருவதும், கோயில் திருவிழா கொடியேற்றத்தின் போது கொடிபட்டம் வெளிபிரகாரம் சுற்றி வருவதும், ஆனித்தேரோட்டத்தின் போது தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்டு ரதவீதி வலம் வருவதும், திருவிழாவின் போது சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் போது காந்திமதியானை ரதவீதி வலம் வரும் வைபவம் நடைபெறும். காந்திமதி யானை ஆண்டு தோறும் நடத்தப்படும் நலவாழ்வு முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு சத்தான உணவு, மூலகை உணவு அளிக்கப்பட்டதோடு ஏராளமான உடற்பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து கோயிலிலும் கால்நடை மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் காந்திமதி யானைக்கு சத்தான உணவு பழங்கள், மூலிகை உணவுகளும், காய்கறிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டிவதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் முன்னரே அனலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில் அவ்வப்போது கோடை மழையானது ஒரு சில இடங்களில் மட்டும் முகம்காட்டி மறைந்த வண்ணம் உள்ளது.
இதனால் வெப்பத்தின் தாக்கம் முழுமையாகக் குறைந்தபாடில்லை.

இவ்வாறு கொளுத்தும் வெயிலில் இருந்து காந்திமதி யானையை பாதுகாக்கும்பொருட்டு நெல்லையப்பர் கோயிலில் வசந்த மண்டபம் பகுதியில் பிரத்யேகமாக 22 அடி நீளத்திலும், 26 அடி அகலத்திலும் நீச்சல் குளம் கட்டப்பட்டது. சுமார் 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளத்தில் பாகன்கள் கட்டளைக்கு இணங்க காந்திமதி யானை தினமும் குளித்தும், நீச்சல் அடித்தும் குதூகலமாக இருந்து வருகிறது.

இதே போல் நேற்றும் இந்த நீச்சல் குளத்தில் காந்திமதி யானை குளிப்பதை கோயிலுக்கு வந்த பக்தர்கள் சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதியை இணைக்கும் சங்கிலி மண்டம் அருகே வசந்த மண்டப நுழைவு வாயில் பகுதியில் நின்றவாறு ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

The post கோடை வெப்பத்தை தணிக்க நெல்லையப்பர் கோயில் நீச்சல்குளத்தில் காந்திமதி யானை குளித்து குதூகலம் appeared first on Dinakaran.

Tags : Gandhimati ,Nellayapar temple ,Nellai ,Nellaiappar temple ,Dinakaran ,
× RELATED நெல்லையப்பர் கோயிலின் சந்திர...